பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பதிவுத்துறை உதவி தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பதிவுத்துறை உதவி தலைவர் பதவி உயர்வுக்கான பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனால் வணிகவரி மற்றும் பதிவுத்துறை இதை மறுத்து, அனைத்து நடைமுறைகளும் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது. இது முற்றிலும் பொய்யான கூற்றாகும். அரசு தனது தவறுகளை மறைக்க பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பணிமூப்புப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பதாலேயே இவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பட்டியல் வெளியிடப்பட்டால்தான் தகுதியானவர்களுக்கு உரிய பணிமூப்பு வழங்கப்பட்டதா என சரிபார்க்க முடியும். அதைச் செய்யாமல் நேரடியாக பதவி உயர்வு ஆணைகள் பிறப்பித்தால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
பதிவுத்துறை அளித்த விளக்கத்தில், “2009–10 முதல் 2019–20 வரை மாவட்டப் பதிவாளர் தேர்வுக்கான பெயர்பட்டியல் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, 02.02.2024 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி அறிவிக்கப்பட்டது” என கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த அன்புமணி, “அந்த அரசாணைகள் 22 முதல் 32 வரை எண்களுடன் வெளியிடப்பட்டதாக பதிவுத்துறை கூறுகிறது. ஆனால் அவை பொதுவெளியில் வெளியிடப்பட்டதையும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதையும் திமுக அரசு நிரூபிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“வருவாய்த் துறையில் G.O.(3D) No.10 (13.01.2023) அடிப்படையில் தகுதி பருவம் நிறைவு செய்யாதவர்களுக்குக் கூட விலக்கு அளித்து துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நடைமுறை பதிவுத்துறையில் ஏன் பின்பற்றப்படவில்லை? யாருடைய பதவி உயர்வை தடுக்க திமுக அரசு இதைச் செய்தது?” என்றார்.
அதேபோல், தகுதி பெற்ற பல சார்பு பதிவாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற ஏழு பேர் இன்று வரை மாவட்ட பதிவாளர்களாகவே பணியாற்றி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இறுதியாக, அன்புமணி வலியுறுத்தியதாவது:
“பதிவுத்துறை உதவி ஐஜி பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப் பெறப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை உடனடியாக வெளியிட்டு, அதற்கான கருத்துகளைப் பெற்ற பின்,
உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவி தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.”