“நவம்பர் 14-ல் பிஹாரில் புதிய அரசு உருவாகும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த பிறகு, மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், “நவம்பர் 14ஆம் தேதி பிஹாரில் புதிய அரசு அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், குடும்பத்துடன் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பிஹார் மக்கள் தங்கள் நிகழ்காலம், எதிர்காலம் குறித்து சிந்தித்து அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறுவோம்; பிஹார் வெற்றி பெறும். நவம்பர் 14 அன்று மாற்றம் நிகழும்,” என கூறினார்.
மேலும், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர்,
“பிஹாரின் எதிர்காலம் உங்கள் ஒரு வாக்கில் தான் முடிவு செய்யப்படுகிறது. ஜனநாயகம் மற்றும் மனிதநேயத்திற்காக வாக்களியுங்கள். ஒவ்வொரு இளைஞரும், விவசாயியும், தொழிலாளியும், பெண்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.