தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 22 வரை 147 சிறப்பு ரயில்கள் — தெற்கு ரயில்வே அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் பெரும்திரளைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சார்பில் அக்டோபர் 22-ஆம் தேதி வரை மொத்தம் 147 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (அக்.19) மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி நாளை (அக்.20) கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தெற்கு ரயில்வே சிறப்பு சேவைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அக்டோபர் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த சிறப்பு சேவையின் ஒரு பகுதியாக,
- அக்டோபர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 37 ரயில்கள்,
- அக்டோபர் 18-ஆம் தேதி சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 24 ரயில்கள்,
- இன்று (அக்.19) 19 ரயில்கள்,
இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தீபாவளி திருநாளான நாளை (அக்.20) மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்பின்னர், தீபாவளிக்குப் பிந்தைய நாளான (அக்.21) 25 ரயில்களும், அதன் மறுநாளான (அக்.22) 19 ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.