கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு: தமிழகமெங்கும் பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து தமிழகமெங்கும் புதன்கிழமை (நவம்பர் 5) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: “19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன் காரில் இருந்தபோது கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.
2013ல் தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தின் போது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பெரிய போராட்டம் நடத்தியிருந்தார். ஆனால் கோவை சம்பவம் குறித்து இன்றுவரை முதல்வர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை” என்றார்.
கோவையில் போதைப் பொருட்கள் பரவல் அதிகரித்து வருவதாகவும், அந்தப் பிரிவில் பணியாற்ற வேண்டுமெனில் உயர்ந்த அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“பெண்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லை. இக்கட்டான சூழலில், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வகை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மகளிரணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு MLA-வுமான வானதி சீனிவாசன் தலைமையேற்றார். பெண்கள் பெப்பர் ஸ்பிரே, தீப்பந்தம் உள்ளிட்டவற்றை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அரசு பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே பெண்கள் விழிப்புடன் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. தேவையானபோது பயன்படுத்த பெப்பர் ஸ்பிரே போன்ற பொருட்களை எடுத்துச் செல்கின்றது அவசியம்” என்றார்.