கிருஷ்ணகிரி அருகே மூன்றாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில், மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தைச் சேர்ந்த வணிக கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை வழங்கிய தகவலின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
கோட்டீஸ்வர நயினார் என்பவரின் தென்னைத் தோப்பில், கிழக்கு நோக்கி நின்ற நிலையில் கஜலக்ஷ்மி சிற்பத்துடன் காணப்பட்ட இந்த கல்வெட்டு, இருபுறமும் எழுத்துகள் பொறிக்கப்பட்டதாக உள்ளது.
காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் தமிழ் தொன்மை ஆய்வாளர் கோவிந்தராஜ் வழங்கிய தகவலில் கூறியதாவது:
தருமபுரியிலிருந்து ஆந்திரா மாநிலம் பூதலப்பட்டு வரை சென்ற அதியமான் பெருவழி வழித்தடத்தில் அண்மையில் பல வணிகக் குழு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் மஞ்சமேடு கிராமமும் ஒன்றாகும். இங்கு கண்ட கல்வெட்டு, “எழுபத்தொன்பது நாட்டார்” எனப்படும் வணிகக் கூட்டமைப்பைச் சேர்ந்ததாகும்.
நிகரிலிசோழ மண்டலத்தின் கீழ் இருக்கும் கங்கநாடு, தகடூர்நாடு, எயில்நாடு போன்ற பகுதிகளில் இருந்த வணிகர்கள் மஞ்சமாடத்தில் உள்ள “மஞ்சமாட எம்பெருமான் பெரிய நாட்டுப் பெருமாள்” கோவிலுக்குத் தலா ஒரு பணம் வழங்கியதாக கல்வெட்டு பதிவு கூறுகிறது. கல்வெட்டின் முன்புறத்தில் உள்ள கஜலக்ஷ்மி உருவம் மிக நுட்பமாக செதுக்கப்பட்டதாகவும், அதன் அருகே வணிகச் சின்னங்களான கலசம், குத்துவிளக்கு, சேவல், பன்றி, ஏர்கலப்பை போன்றவை பொறிக்கப்பட்டுள்ளனவும் தெரியவந்துள்ளது.
இந்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 22-ஆம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். இதன் மூலம், இன்றைய மஞ்சமேடு பகுதி, 825 ஆண்டுகளுக்கு முன்பு “மஞ்சமாடம்” என்ற பெயரில் அறியப்பட்டதை வரலாறு உறுதிப்படுத்துகிறது. மேலும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “மஞ்சமாட எம்பெருமான்” கோவில், தற்போதைய வாடமங்கலம் பெருமாள் கோவில் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.