அனில் அம்பானியின் ரூ.3,000 கோடிக்கு மேற்பட்ட சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி குற்றச்சாட்டு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயரில் உள்ள ரூ.3,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை (ED) முடக்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட நிதி முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மும்பை பாலி ஹில்லில் உள்ள அனில் அம்பானியின் சொகுசு வீடு, டெல்லி மகாராஜா ரஞ்சித் சிங் சாலையில் உள்ள ரிலையன்ஸ் மையம் நிலம், டெல்லியில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிற கட்டிடங்கள் மற்றும் நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியை விதிமுறைகளுக்கு முரணாக வேறு துறைகளில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017–19 காலகட்டத்தில் யெஸ் வங்கி, இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ரூ.2,965 கோடி மற்றும் ரூ.2,045 கோடி என மொத்தம் ரூ.5,010 கோடி கடன் வழங்கியது. இதில் ஒரு பெரிய பகுதி செயல்படாத கடன்களாக (NPA) மாறிவிட்டது. 2019-க்கு நிலையில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்சுக்கு ரூ.1,353.50 கோடியும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்சுக்கு ரூ.1,984 கோடியும் வழங்கிவைக்கப்படாமல் இருந்தன.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.17,000 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டதாக ED குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக, கடந்த ஜூலை 24 அன்று மும்பையில் ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 35 இடங்களில் தேடுதல் நடத்தியது. சுமார் 50 நிறுவனங்களும், 25 முக்கிய நபர்களும் இதில் தொடர்புடையதாக கூறப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் அனில் அம்பானியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.