சுசீந்திரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, கோயிலின் பார்வையாளர் பதிவேட்டில் தமது எண்ணங்களை பதிவு செய்து, பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் நல்லது நடைபெற வேண்டுமெனப் பிரார்த்தித்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு வந்த ஆளுநர், மாலைப்பொழுது விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து, கண்ணாடி பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டார். அதன் பின்னர் பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
இன்றுக் காலை சுசீந்திரம் கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு, கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஜான்சி ராணி தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோயிலில் மூலஸ்தானத்தில் மும்மூர்த்திகளுக்கும், 18 அடி உயர ஆஞ்சநேயருக்கும், பிற சன்னதிகளிலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு செய்தனர்.
புகைப்படம் மற்றும் தரிசனத்துக்குப் பின் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்தில், “சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் அருமையான தரிசனம் கிடைத்தது. கோயில் பணியாளர்களின் சேவை காரணமாக இத்தலம் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பரமேஸ்வரன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். வாழ்க பாரதம்!” என குறிப்பிட்டிருந்தார்.