டிரம்பை நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரான்சில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளதை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வார கால அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். இதில் பிரான்ஸில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அவர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார்.
இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு உலகளாவிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்திக்கவுள்ள இந்த நிகழ்வு, சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர அரங்கில் பெரும் முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.





