சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா உட்பட 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை: ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்!
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட சுமார் 75 சதவீத கவுன்சிலர்கள் இன்னும் தங்களது சொத்து விவரங்களைச் சட்டப்படியாக அறிவிக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலமாக தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 2ஆம் தேதியிட்ட ஆர்டிஐ வினவலுக்குச் சென்னை மாநகராட்சி அளித்துள்ள அதிகாரப்பூர்வப் பதிலில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே தங்களது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த முறையான அறிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் பெரும் அதிர்ச்சியாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரே தங்களது சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சிச் சட்ட விதிமுறைகள்: “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.”
மாநகராட்சி விதிகளின்படி, பதவியேற்றது மட்டுமின்றி தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டிற்குரிய புதுப்பிக்கப்பட்ட சொத்து அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பிக்காத 157 கவுன்சிலர்களில், நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்றும், 2 பேர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த ஆர்டிஐ பதிலில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.



