வணிக சிலிண்டர் விலை மீண்டும் ரூ.46 உயர்வு: ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி – வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரண சூழல்களுக்கு மத்தியில், வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial LPG Cylinder) சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய அண்மைய தாக்குதலுக்குப் பிறகு, உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கிடைப்பதில் பெரும் சிக்கல்களும் தட்டுப்பாடுகளும் நீடித்து வருகின்றன. இந்த உலகளாவிய தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் நோக்கில், பொதுமக்களின் நலன் கருதி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களைத் தடையில்லாமல் மத்திய அரசு விநியோகம் செய்து வருகிறது; இதற்காக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் சற்றே குறைக்கப்பட்டது.
தற்போது வணிக சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஓரளவு அதிகரித்த போதிலும், மாதந்தோறும் அதன் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
புதிய விலை நிலவரம்: அந்த வகையில், நடப்பு ஜூன் மாதத்திற்கான விலை மாற்றத்தின்படி வணிக சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ.3,283 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதலாக வீட்டு உபயோக சிலிண்டரின் (Domestic LPG Cylinder) விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
வணிக சிலிண்டர் விலை மீண்டும் ₹3,000-ஐத் தாண்டி உச்சம் தொட்டுள்ளதால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் நடத்துவோர் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக, வரும் நாட்களில் வெளி உணவுகளின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.





