மேகதாது அணை திட்டத்திற்குத் தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அதிரடி வழக்கு!
சென்னை / புதுடெல்லி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இத்திட்டத்திற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழக அரசு சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த மே 25-ஆம் தேதி சட்ட வல்லுநர்களுடன் உயர்நிலை ஆலோசனையை மேற்கொண்டார். அப்போது, முந்தைய தீர்ப்புகளின் விபரங்களை முழுமையாகக் கருத்தில் கொண்டு, உடனடியாகத் தகுந்த தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரத்தில் உள்ள அனைத்துச் சட்ட வாய்ப்புகள் குறித்தும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழ்நாடு இல்லத்தில் வைத்து விரிவாக விவாதித்தார். இந்த ஆலோசனையின் முடிவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்ய அவர் இறுதி ஒப்புதல் அளித்தார். அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் மனுவில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது; எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரியுள்ள தமிழக அரசு, சுற்றுச்சூழல் விதிகளை அப்பட்டமாக மீறும் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் எக்காரணம் கொண்டும் சூழல் அனுமதி (Environmental Clearance) வழங்கக் கூடாது என்றும் தனது மனுவில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி மனு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.




