ஆளுநர் மாளிகையில் முறைப்படி ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் சித்தராமையா – ஆளுநரின் சிறப்புச் செயலாளர் விளக்கம்!
பெங்களூரு:
கர்நாடக அரசியலில் பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சித்தராமையா, இன்று பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகை) நேரில் சென்று தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அப்போது ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மாளிகையில் இல்லாத காரணத்தினால், ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபுசங்கரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சித்தராமையா முறைப்படி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட மரபுகள் குறித்து ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபுசங்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். “தற்போது வெளியில் சென்றுள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் பெங்களூரு திரும்பிவிடுவார். எனவே, முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் மீண்டும் மாலை ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்து, ஆளுநரை நேரில் சந்தித்து முறைப்படி பேச வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பதற்கான அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





