தெலங்கானாவில் கொடூரம்: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் – பொதுமக்களின் தர்ம அடியில் உயிரிழப்பு!
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் காதலை நிராகரித்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையிலேயே கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவமும், அதைத்தொடர்ந்து கொலையாளியைப் பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம்பெண், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராக (Receptionist) பணியாற்றி வந்தார். இவரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜா என்ற வாலிபர் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தேஜாவின் காதலை வைஷ்ணவி பலமுறை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், வைஷ்ணவிக்கு வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தேஜா, பழிவாங்கத் துடித்தார். சம்பவத்தன்று பணி முடிந்து வைஷ்ணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை நடுரோட்டில் வழிமறித்த தேஜா, பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கத்தியால் அவரது கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வைஷ்ணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொடூரத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், தப்பியோட முயன்ற கொலையாளி தேஜாவை நாலாபுறமும் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்த தேஜாவை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





