பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம்: டெல்லி மாநாட்டில் கூட்டு அறிக்கை!
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு, சர்வதேச கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ (BRICS) நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தை கூட்டாகப் பதிவு செய்துள்ளன.
தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா கொண்டுள்ள தீவிரமான கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது முழு ஆதரவை வழங்கின.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை மாநாட்டில் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், எத்தகைய காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத செயல்கள் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதவை என்றும், அவை கடுமையான குற்றவியல் பின்னணி கொண்டவை என்றும் தங்களது அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கையில் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், ஐக்கிய நாடுகள் சபையால் (UN) தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் வழியே பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.





