“எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும்; குதிரை பேரம் நடத்தாது” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மக்கள் நலனுக்காக மிக வேகமாகச் செயல்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆற்றிய உரைக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “தவெக அரசு என்பது குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுப்பிய குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்குவது குறித்த கருத்துக்களைத் தான் பரிசீலனை செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும், முந்தைய அரசு கொண்டு வந்த சிறந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
“தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் காட்டிய கொள்கை வழியிலிருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும்” என்று தெரிவித்த முதலமைச்சர், தனது அரசுக்கு ஆதரவளித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





