உத்தரப் பிரதேச மக்களை இழிவுபடுத்தும் திமுக-வுடன் சமாஜ்வாதி கூட்டணி: பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘கங்கா அதிவிரைவுச் சாலை’யைத் (Ganga Expressway) திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகளை மிகக்கடுமையாகச் சாடினார். உத்தரப் பிரதேச மாநிலத்தையும் அதன் மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திமுக போன்ற கட்சிகளுடன், அரசியல் லாபத்திற்காகச் சமாஜ்வாதி கட்சி கைகோர்த்து நிற்பது அம்மாநில மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று அவர் குற்றம் சாட்டினார். திமுக இத்தகைய விமர்சனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும், அதற்குச் சமாஜ்வாதி கட்சித் துணை போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமாஜ்வாதி கட்சியின் செயல்பாடுகள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருப்பதாகவும், மாநிலத்தைப் பழைய பின்தங்கிய நிலைக்கு இழுத்துச் செல்ல அக்கட்சி விரும்புவதாகவும் பிரதமர் விமர்சித்தார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை அக்கட்சி கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு எதிராகச் சமாஜ்வாதி கட்சி வாக்களித்ததை மேடையில் நினைவுகூர்ந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் எதிரான சக்தியாகச் சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளதாகப் பிரதமர் மோடி தனது உரையில் எச்சரித்தார்.





