குண்டும் குழியுமாக ராமேஸ்வரம் சன்னதி சாலை – உடனடி சீரமைப்பை பக்தர்கள் கோரிக்கை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து அக்னி தீர்த்தக் கடற்கரை வரை செல்லும் சன்னதி தெரு சாலை முழுவதும் உடைக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அனுபவித்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, பின்னர் கோயிலின் 22 புனித தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், கோயிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் முக்கிய சாலையான சன்னதி சாலை புதுப்பிக்கப்படுவதற்காக அகழப்பட்டது. ஆனால் புதுப்பிப்பு பணிகள் தாமதமாகி, சாலை முழுவதும் குழியுடன், சேறும் கழிவு நீரும் கலந்த நிலையில் உள்ளது. இதனால் நடைபயணம் செய்யும் பக்தர்கள், குறிப்பாக முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அக்னி தீர்த்தம் வரை இயக்கப்படும் பேட்டரி வண்டிகளும் சாலை நிலைமை காரணமாக இயங்க முடியாமல் உள்ளன. செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் பக்தர்களுக்கு காலில் காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சன்னதி சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.