திருவண்ணாமலையில் வினோதம்: கட்டுமான செங்கற்களை ‘வேண்டுதல் கல்லாக’ மாற்றிய பக்தர்கள்!
திருவண்ணாமலை: ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயிலில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களைப் பக்தர்கள் ‘வேண்டுதல் கற்களாக’ மாற்றி வழிபாடு நடத்தி வருவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கம் எப்படி?: அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பேய்க்கோபுரம் அருகே, கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பணிகளுக்காக ஒரு லோடு செங்கற்கள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்பவர்கள், தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒரு கல்லின் மேல் மற்றொரு கல்லை அடுக்கி வைத்துச் செல்வது வழக்கமாகும்.
இந்த முறையை அறிந்தோ அல்லது அறியாமலோ, கோயிலுக்கு வந்த ஒரு பக்தர் அங்கிருந்த செங்கற்களை அடுக்கி வைத்து வேண்டிக் கொண்டு சென்றுள்ளார்.
பரவிய வினோத வழிபாடு: இதனைப் பார்த்த மற்ற பக்தர்களும், “இப்படிச் செங்கற்களை அடுக்கி வைத்தால் சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும்” அல்லது “நினைத்த காரியம் கைகூடும்” என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்டு, போட்டி போட்டுக்கொண்டு கற்களை அடுக்கத் தொடங்கினர்.
குவிந்த கற்கள்: தற்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு லோடு செங்கற்களும் பக்தர்களின் கைகளால் சிறு சிறு கோபுரங்கள் போல அடுக்கப்பட்டு, அந்த இடமே ஒரு வேண்டுதல் தலமாக மாறியுள்ளது. என்ன ஏது என்று தெரியாமலேயே ஒருவர் செய்வதைப் பார்த்துப் பலரும் இதனைப் பின்பற்றுவது அங்கிருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிர்வாகம் தரப்பில்: கோயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கற்கள் இப்படி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதால், கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இது போன்ற தேவையற்ற நம்பிக்கைகளைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






