கன்யாகுமரியில் தளவாய் சுந்தரம் தீவிர பரப்புரை: பெண்கள் மற்றும் திருநங்கைகளிடம் வாக்கு சேகரிப்பு!
கன்யாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று இறச்சகுளம், நாவல்காடு மற்றும் அருமநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்தார். பின்னர், திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளை நேரில் சந்தித்து உரையாடிய தளவாய் சுந்தரம், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் பெண்கள் அவருக்கு ஆர்த்தியெடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளரின் இந்தத் தீவிரப் பிரச்சாரம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




