“தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடி” – திமுக அரசைச் சாடிய சரத்குமார்!
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாகப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் உயர்ந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
மக்களுக்காக மத்திய அரசு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்திற்காக மத்திய அரசு ஒதுக்கும் பெரும் நிதி எங்கே போகிறது என்றே தெரியவில்லை என விமர்சித்தார். பிரச்சாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் மிரட்டல்களுக்குப் பாஜக ஒருபோதும் அஞ்சாது என்று தெரிவித்தார். மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்வது என்பது சட்டப்பூர்வமான ஒரு நடைமுறை மட்டுமே என்பதையும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.





