“திருச்செந்தூரில் உள்ளூர் மக்கள் தரிசனத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும்” – அண்ணாமலை அதிரடி வாக்குறுதி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுமுகநேரி பகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தினமும் 2 மணி நேரம் தனியாக ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்செந்தூர் தொகுதியை திமுகவினர் தங்களது சொந்தக் குடும்பச் சொத்தாக மாற்றி வைத்துள்ளதாகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அவரை மக்கள் மீண்டும் ஒருமுறை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிவித்தார். எனவே, தொகுதி மாற்றத்தையும் வளர்ச்சியையும் காண பாஜக வேட்பாளருக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.





