“நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் பொய் சொல்கிறார்” – கடித ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், முதலமைச்சரின் பேச்சு உண்மைக்குப் புறம்பானது என்று சாடியுள்ளார்.
திமுக மீது கடும் விமர்சனம்:
மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்கி, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பதில் முதலமைச்சரும் அவரது கட்சியும் கைதேர்ந்தவர்கள் என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டு முதலமைச்சர் அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியின் அவசியம்:
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது இந்தியாவின் உத்திசார்ந்த தேவை என்று குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் இந்தியா பெருமளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறது என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? எனத் கேள்வி எழுப்பியுள்ளார். சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
உணவு இறையாண்மை:
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் என்பது தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு அழைப்பு மட்டுமே. அதனை ஸ்டாலின் சர்ச்சையாக்கி நேரத்தை வீணடிப்பதாகக் கூறியுள்ள அவர், மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வரவேற்காமல் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிப்பது தேச நலனில் அக்கறையற்ற செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
வெற்று வீரமா?
செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு சவால் விடும் முதலமைச்சரின் செயல் ஆச்சரியமளிப்பதாகவும், இது ஒரு வெற்று வீரமே என்றும் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகளைத் திமுக ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம் என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார். நிதியமைச்சரின் இந்தக் கடித வெளியீடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.




