“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைவர் முருகானந்தம் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிராகச் செயல்படுவது, 200-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்தது மற்றும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தாமல் இந்துக்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது போன்ற செயல்களில் திமுக ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “திமுகவிற்கு வாக்களிப்பதும் திருடனை வீட்டிற்கு அழைப்பதும் ஒன்று” என்று அன்று பெருந்தலைவர் காமராஜர் கர்ஜித்ததை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து, இந்து தர்மத்தைக் காக்க அனைத்து இந்துக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என இந்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முருகானந்தம் நாடார் கோரிக்கை விடுத்துள்ளார்.



