கோவையில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம்? தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கணியூர் ஊராட்சியில், திமுகவினர் வாக்காளர்களுக்குத் டோக்கன் விநியோகிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கணியூர் சின்னத்தோட்டம் பகுதியில், திமுகவினர் வாக்காளர்களை நேரில் வரவழைத்து, ரகசிய எண்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட டோக்கன்களை ரகசியமாக விநியோகித்து வருவதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த டோக்கன்களைக் காண்பித்தால் குறிப்பிட்ட இடங்களில் பணம் அல்லது பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என வாக்காளர்களுக்கு ஆசைவார்த்தை கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதோடு, பள்ளி சிறுவர்களும் தங்கள் வீடுகளின் குடும்ப அட்டைகளை எடுத்துக்கொண்டு டோக்கன் பெற அங்கு ஆர்வத்துடன் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அதிகாரிகளைக் கண்டதும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான டோக்கன்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். இந்த விதிமீறல் தொடர்பாகத் தேர்தல் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




