“NDA கூட்டணியின் ஒற்றுமையே மாற்றத்திற்கான அடையாளம்” – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன் நெகிழ்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன் தலைமையில், கூட்டணி கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பாகுபாடின்றி ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் திரண்டிருந்த ஏராளமான நிர்வாகிகளிடையே உரையாற்றிய நிவின் சைமன், சாதி, மதங்களைக் கடந்து அனைவரும் ஒரு சேரக் கூடியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இங்கு நிலவும் இந்த அரவணைப்பே தமிழகத்தில் வரப்போகும் மாற்றத்திற்கான அடையாளம் என்றும் குறிப்பிட்டார். நமது கூட்டணியின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ‘மதவாத சக்தி’ என்று தவறாகச் சித்தரிப்பவர்களைத் தேர்தல் களத்திலிருந்து மக்கள் உதவியோடு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தொண்டர்களிடம் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.




