“எங்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்ட இஸ்லாமிய பெண்கள்!
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புறநகர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இந்தத் திடீர் முரண்பாடு வெடித்தது.
அமைச்சர் வந்த வாகனத்தை வழிமறித்த அப்பகுதி இஸ்லாமிய பெண்கள், தங்கள் வார்டு மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் இதுவரை செய்து தரவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர், பெண்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த முற்றுகை மற்றும் வாக்குவாதம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. தேர்தல் நேரத்தில் அமைச்சருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.




