காஞ்சிபுரம் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நித்யா சுகுமார் தரப்பிலிருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேட்பாளரின் கணவருக்கு நெருங்கிய நண்பரான ராஜ்குமார் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல், தொழிலதிபர் ஸ்ரீதர் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனின் நேர்முக உதவியாளரான எழில்குமார் வீட்டிலும் நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்றது. தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்படும் இந்தச் சோதனைகள் காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




