சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மழை, மெட்ரோ பணி, சாலை பள்ளங்கள் காரணம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பல சாலைகள் சேதமடைந்து, மழைநீர் தேங்கியுள்ளதால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மோந்தா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட தொடர்ச்சியான மழையால் சாலைகளின் இருபுறமும் நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால், அந்த பள்ளங்களில் நீர் நிரம்பி, வாகன ஓட்டிகள் சீராகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து, முக்கிய சாலைகளில் நீண்ட வரிசை போக்குவரத்து உருவானது.
மேலும், நகரத்தின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணி மற்றும் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் சுருங்கியுள்ளன. இதுவும் நெரிசலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அண்ணாசாலையில் நடைபெறும் இரும்பு மேம்பாலப் பணிக்காக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கிண்டி முதல் பூந்தமல்லி வரை நடைபெறும் இரடுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், இப்பகுதிகளில் வழக்கத்திலும் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை, திருவான்மியூர், அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களிலும் வாகன நெரிசல் கடுமையாக இருந்தது.
தொடர்ந்து பெய்த மழையால் வட சென்னை பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மழை நின்றதும் சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து சில மணி நேரங்களில் சீரானது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.