“மத்திய அரசு நிதியை திமுக அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை” – கோவையில் பியூஸ் கோயல் குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பல லட்சம் கோடி ரூபாய் நிதியை வழங்கினாலும், அதனைத் திமுக அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று சாடினார்.
குறிப்பாக, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அவர், மாநில அரசு அரைகுறையான அறிக்கையைத் தாக்கல் செய்ததாலேயே மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் திமுக அரசு திட்டத்தைத் தாமதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்தார். மேலும், ஊடகங்களையும் யூடியூபர்களையும் திமுக அரசு அச்சுறுத்தி வருவதாகக் கூறிய அவர், குடும்ப அரசியலையும் ஊழலையும் முன்னிறுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
தேர்தல் நேரத்தில் திமுக அளிக்கும் போலி வாக்குறுதிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும், இந்தத் தேர்தலில் கோவையில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.




