“காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் விஜய்யைச் சந்தித்தேன்” – பிரவீன் சக்கரவர்த்தி அதிரடிப் பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நடத்திய சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யுடனான எனது சந்திப்புகள் தனிப்பட்டவை அல்ல; கடந்த ஆறு மாதங்களில் நான் மேற்கொண்ட அனைத்து நகர்வுகளும் காங்கிரஸ் தலைமையின் முழுச் சம்மதத்துடனேயே நடைபெற்றன” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக எந்தவொரு தியாகத்திற்கும், ஏன் பலிகடாவாக மாறக்கூடத் தான் தயாராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கட்சிக்குள்ளேயே சிலர் தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது வருத்தமளிப்பதாகக் கூறினார். மேலும், விஜய்யுடனான சந்திப்பில் மற்றொரு மூத்த காங்கிரஸ் நிர்வாகியும் கலந்துகொண்டார் என்ற ரகசியத்தை அவர் உடைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸின் நிலை குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது; அதற்குத் தனது சொந்த பலமே தெரியவில்லை” என்று விமர்சித்தார். ஒரு தேசியக் கட்சி ஒரு மாநிலத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள் தவெக உடனான கூட்டணியை ஆதரித்ததாகவும், ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் குறித்துப் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இறுதியாக, தற்போதைய தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்றும், தவெக பிரிக்கும் வாக்குகள் ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி கணித்துள்ளார். திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவும் வேளையில், காங்கிரஸ் நிர்வாகியின் இந்தத் திடுக்கிடும் தகவல்கள் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.




