“தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் “டபுள் என்ஜின்” அரசு அமைந்தால் மட்டுமே, மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைந்து மாநிலம் வளர்ச்சி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, கரந்தை பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தஞ்சை தொகுதியின் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் மத்திய அமைச்சர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் கருப்பு முருகானந்தம் போன்ற தகுதியான வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட ஜி.கே.வாசன், “தாமரை” சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.




