“விசிக-வினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை” – சிதம்பரம் வன்முறைச் சம்பவத்திற்கு எல்.முருகன் கடும் கண்டனம்!
சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நடத்திய பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது” என்று சாடியுள்ளார். அமைதியான முறையில் நடைபெற்ற மாணவர் அமைப்பின் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டியவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே அஸ்வத்தாமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகனின் இந்த அறிக்கை விசிக மற்றும் பாஜக இடையே அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.





