தென்காசி துப்பாக்கிச்சூடு: பனைத் தொழிலாளியைச் சுட்ட சார்பு ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை ஏறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா பணியிடை நீக்கம் (Sustension) செய்யப்பட்டுள்ளார். மருதமுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் கள் இறக்கியதாகக் கூறப்படும் புகாரின் பேரில் விசாரணை நடத்தச் சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
விசாரணையின் போது சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் தன்னைத் தாக்கியதாகக் கூறி, தற்காப்பிற்காகத் தனது கைத்துப்பாக்கியால் மணிகண்டனின் காலில் இசக்கி ராஜா சுட்டுள்ளார். ஒரு சாமானியத் தொழிலாளி மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதாரி, அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகச் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்த தொழிலாளி மணிகண்டன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




