“கடன் வாங்கி கொள்ளையடிக்கும் திமுக அரசு தேவையா?” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் நேரடி விவாதம் விடுக்கிறார்!
தமிழகத்தில் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தத் தவறிய ‘பொம்மை முதலமைச்சராக’ மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்துத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், திமுக அரசின் செயல்பாடுகளை அடுக்கடுக்காக விமர்சித்தார்.
தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் புழக்கம் அபாயகரமாக அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்தார். ஊழல் மற்றும் கொள்ளையடிப்பதில் இந்த அரசு முதலிடத்தில் உள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், “கடன் வாங்கி கொள்ளையடிக்கும் இந்த திமுக அரசு இன்னும் தொடர வேண்டுமா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது ஆட்சியின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் தோல்விகள் குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா? என்று அவர் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆவேசமான பேச்சு சென்னை தேர்தல் களத்தில் அரசியல் வெப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.




