“திமுகவின் தோல்வி கோவையில் தொடங்கும்” – அண்ணாமலை அதிரடிப் பேச்சு!
கோயம்புத்தூரில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்றும், அக்கட்சியின் வீழ்ச்சி கோவையிலிருந்தே தொடங்கும் என்றும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்துப் பணப்பட்டுவாடா செய்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதிமுக வேட்பாளர்கள் கண்ணியமான முறையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். புதுச்சேரிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, தனது பேச்சில் ‘திமுக’ அல்லது ‘ஸ்டாலின்’ என்ற வார்த்தைகளைக்கூடப் பயன்படுத்தவில்லை என்றும், இதனால் தமிழகத்தில் அவர் தேர்தல் பரப்புரை செய்வது சந்தேகமே என்றும் அண்ணாமலை கூறினார்.
மேலும், தேர்தலில் திமுக வெற்றி பெறுவதில் ராகுல் காந்திக்கே விருப்பம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கி, நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவையில் செந்தில் பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்பது உறுதி எனத் தெரிவித்த அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




