“தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!
இந்திய இறையாண்மையைச் சீர்குலைக்கும் வகையில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் சல்மா மீது விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஈரான் போர் விவகாரம் குறித்துப் பதிவிட்டிருந்த சல்மா, “பாகிஸ்தானின் தலையீட்டால் ஈரான் போர் நின்றிருக்கிறது. விஸ்வகுரு பாவம்! சங்கிகள் எப்படி ஜீரணிக்கப் போகிறீர்கள்?” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத், “வெட்கமில்லாமல் நா கூசாமல் சல்மா தெரிவித்துள்ள இந்தக் கருத்து முற்றிலும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் கற்றுக்கொடுத்த திராவிட மாடல் அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் இத்தகைய தேசவிரோதக் கருத்துகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும், சல்மா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தனது கண்டன அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





