“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் 25 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையான ‘கடல் ஆம்புலன்ஸ் திட்டம்’ இன்னும் ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என கிள்ளியூர் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நிவின் சைமன் உறுதியளித்துள்ளார். கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிவின் சைமன், “கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கடலை நம்பித் தொழில் செய்து வருகின்றனர். கடல் சீற்றம் மற்றும் விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 25 மீனவர்கள் வரை உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நாங்கள் வெற்றி பெற்றவுடன், அடுத்த 6 மாதங்களுக்குள் இத்திட்டத்தை முழுமையாகக் கொண்டு வந்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வேட்பாளரின் இந்த அறிவிப்பு கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




