அதிமுக ஆட்சி அமைந்ததும் மதுரை மெட்ரோ மற்றும் எய்ம்ஸ் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆர்.பி. உதயகுமார் உறுதி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாகத் திறந்து வைக்கப்படும் என்றும், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதியளித்துள்ளார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம், மறவபட்டி மற்றும் வில்லூர் ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பெண்கள் மற்றும் முதியவர்களின் கால்களில் விழுந்து ஆதரவு திரட்டினார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தென் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிமுக அரசு முன்னுரிமை அளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.






