தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்று சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிகாரப்பூர்வமாகப் பட்டியலை வெளியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நிகழ்வின் போது திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றப்பத்திரிகை ஒன்றையும் அவர் வெளியிட உள்ளார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸிற்கு எதிராக மத்திய அமைச்சர் அமித்ஷா இத்தகைய குற்றப்பத்திரிகையை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதே பாணியை பாஜக பின்பற்றுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




