40 ஆண்டு காலப் புறக்கணிப்பு: சேலத்தில் அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம்!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்னபொரப்பாம் பள்ளம் கிராம மக்கள், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதிக்குச் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததைக் கண்டித்து, வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாகத் தங்கள் கிராம எல்லையில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்களை வைத்துள்ள அவர்கள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்குத் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ஒரு படி மேலே சென்று, அரசுக்காகக் காத்திருக்காமல் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் தலா 5,000 ரூபாய் வரை நிதி திரட்டி, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குத் தாங்களே சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மாவட்ட நிர்வாகத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






