அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாய வங்கிக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
நிர்வாக ரீதியாக, தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கச்சத்தீவை மீட்கவும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும் அமமுக பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண முறையைப் பொறுத்தவரை, குடியிருப்புகளுக்கு மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் மற்றும் மின்சார வாகனங்களுக்குப் பிரத்யேக மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுத் தந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மீது திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல், நடைமுறைக்குச் சாத்தியமான புதிய மதுக் கொள்கையை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இறுதியாக, தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் டிடிவி தினகரன் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







