தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கண்டனம்: “அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தை விமர்சித்தபோது எங்கே சென்றீர்கள்?” என கேள்வி
திருக்கோவிலூர்:
நடிகர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டபோது அமைதி காத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது புகாரளிக்க எந்த தகுதியும் இல்லாதவர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்ராஜ் மீதான புகார் குறித்துக் கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய சீமான், சமூகம் சீரழிந்து வருவதால் ஏற்பட்ட ஆதங்கத்தில் பொன்ராஜ் அவ்வாறு பேசியிருக்கலாம் எனக் குறிப்பிட்டதோடு, விஜய் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “தவெக தொண்டர்கள் தன்னையும், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரையும் மிகக் கேவலமாக விமர்சித்தபோது விஜய் எங்கே சென்றிருந்தார்?” என அவர் கேள்வி எழுப்பினார். அந்த சமயத்திலேயே தனது கட்சியினருக்கு அறிவுரை கூறி விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், தற்போது அவர் புகாரளிக்க தகுதியுடையவராக இருந்திருப்பார் என்றும் சீமான் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோகிலேயே விஜய் நேரில் சென்று புகாரளித்துள்ளதாக அவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.






