முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக முரசொலி அறக்கட்டளை மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய மனு குறித்து விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, விளம்பரம் என்ற பெயரில் முரசொலி அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடாகச் செலவிடப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என நிலுவையில் உள்ள புகார் குறித்து நீதிமன்றம் தற்போது எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக, இந்த விவகாரம் குறித்து சிபிஐ (CBI), தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் முரசொலி அறக்கட்டளை ஆகிய தரப்பினர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்த நீதிமன்ற உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








