தவெக மகளிர் அணி மீதான அவதூறு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் நேரில் புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான பொன்ராஜ், அண்மையில் தவெக மகளிர் அணியினரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் இன்று நேரில் வருகை தந்தார். அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் மனுவை நேரில் வழங்கிய அவர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட பொன்ராஜ் மீது உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சித் தலைவரே நேரடியாக வந்து புகார் அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







