நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உயிரிழந்தவரின் உறவினர்கள் இன்று 9-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், உயிரிழந்த விவசாயியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், கடந்த 17-ஆம் தேதி மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், ஒரு வாரத்திற்கும் மேலாகக் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல் திணறி வந்தனர். இதற்கிடையில், தந்தை கொல்லப்பட்ட சோகத்தில் இருந்த ஆறுமுகத்தின் மகள் பேபி கனி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பேபி கனி எழுதியிருந்த உருக்கமான கடிதத்தில், தனது தந்தை கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான உறவினர் குறித்த தகவல்களையும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில், நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த சூசைமுத்து, செல்வகுமார் மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருப்பினும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் உண்மையான குற்றவாளிகள் தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதைத் துல்லியமாக நிரூபிக்க வேண்டும் என்றும், அதுவரை ஆறுமுகத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 9-வது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தால் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.









