“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!
சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அதிமுக மற்றும் பாஜக இடையிலான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” என அதிரடியாக முழங்கினார்.
தமிழக மக்களைத் தீய சக்திகளிடம் இருந்து காப்பதே இக்கூட்டணியின் ஒற்றை நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் ஒருமித்த ஆதரவோடு வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுகையில், மிகுந்த மகிழ்வோடும் பரஸ்பர உடன்பாட்டோடும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக முடிக்கப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.









