திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!
திருநெல்வேலி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகக் காவல்துறை இனியும் திமுகவின் ஏவல்துறையாகச் செயல்படக் கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி ஆறுமுகம் என்பவர் படுகொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும், குற்றவாளிகளைக் கண்டறியக் காவல்துறை தவறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஆறுமுகத்தின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் மெத்தனப் போக்காலேயே இன்று மற்றுமொரு அப்பாவி உயிர் பறிபோயுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகியபோது வேடிக்கை பார்த்தது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் காவல்துறை ஏன் செயலற்று இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “இன்னும் 30 நாட்களில் திமுக அரசைத் தமிழக மக்கள் இருந்த இடம் தெரியாமல் தூக்கியெறியப் போகிறார்கள்” என்று குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், காவல்துறை இனியும் ஒரு கட்சிக்குச் சாதகமாகச் செயல்படாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








