தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுக ஆட்சியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தலைவிரித்து ஆடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனால் பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் கும்பலின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமின்றி வெளியே நடமாட முடியாத ஒரு மோசமான நிலை தமிழகத்தில் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார். “மக்கள் விரோத போக்கைக் கடைபிடிக்கும் திமுக ஆட்சியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்” என்று கூறிய எல்.முருகன், வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.







