தேர்தல் பறக்கும் படை சோதனை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
விருதுநகர்:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் அருகே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தைச் சோதனை செய்ய முயன்ற தேர்தல் பறக்கும் படையினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் சோதனைச்சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரது வாகன வரிசையை நிறுத்திய போலீசார், முறைப்படி சோதனை செய்ய முற்பட்டனர்.
இதற்கு முதலமைச்சருடன் வந்த ஆதரவாளர்களும், பாதுகாவலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சரின் வாகனத்தையே சோதனை செய்வதா எனக் கூறி போலீசாருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இருப்பினும், தேர்தல் விதிமுறைகளின்படி போலீசார் முதலமைச்சர் ரங்கசாமியின் காரில் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் எவ்விதமான விதிமீறல்களோ அல்லது ஆவணமற்ற பொருட்களோ இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தனர். தேர்தல் நேரத்தில் ஒரு மாநில முதலமைச்சரின் வாகனமே சோதனைக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.







