செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், திமுக நிர்வாகி சிவாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். செய்யூர் பகுதியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சிறுமி ஒருவரை, சிவா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
உறவினர்கள் குற்றச்சாட்டு:
பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், புகாரளித்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆளுங்கட்சி நிர்வாகி என்பதாலேயே சிவா மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனச் சிறுமியின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை:
தற்போது தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் சிவாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூல வீடியோ எடுத்த வேலு என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







